தமிழகம்

உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் பிச்சையெடுக்கும் மூதாட்டி: ‘வாட்ஸ் அப்’ தகவலால் உடனே நடவடிக்கை

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் சாப்பிட வழியில்லாமல் 85 வயது மூதாட்டி ஒருவர் கடை வீதிகளில் பிச்சை எடுக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே கோடாங்கி நாயக் கன்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பழநியம்மாள் (85). கணவர் இல்லை. இவரது ஒரே மகளை, சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது, பழநியம்மாள் தொகுப்பு வீட்டில் வசிக்கிறார். மேற்கூரை இல்லாத இந்த வீட்டில் சாக்குப் பைகளே மேற்கூரையாக உள்ளது.

முதுமையால் இவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. உறவினர் ஆதரவும் இல்லை. மகளும் வறுமையில் உள்ளதால் தாயாரை பராமரிக்க முடியவில்லை. இவருக்கு கிடைத்துவந்த ஒரே வாழ்வாதாரம் தமிழக அரசு வழங்கிய முதியோர் உதவித்தொகைதான்.

ஆனால், கடந்த 13 மாதங்களாக இவருக்கு உதவித் தொகை நிறுத்தப் பட்டது. இதுகுறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், இவருக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இவர் தற்போது நிலக்கோட்டை கடை வீதிகளில் பிச்சை எடுத்து வருகிறார்.

மூதாட்டியின் பரிதாப நிலையை இளைஞர்கள் சிலர் படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பினர். தற்போது இந்த வீடியோ, திண்டுக்கல் மாவட்டத்தில் விஏஓ முதல் உயர் அதிகாரிகள் வரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கோட்டை வீதிகளில் நேற்று காலை பிச்சையெடுத்த பழநி யம்மாளிடம் கேட்டபோது, ‘நான் 30 ஆண்டுகளுக்கு முன் சென்னை ராயபுரத்தில் கவுரவமாக வாழ்ந்தேன். அதன்பிறகு பணக்கஷ்டத்தால் வீட்டுக்காரர், என்னையும் மகளையும் விட்டு போயிட்டாரு. தனி மரமாக நின்ற நான், கஷ்டப்பட்டு மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். வயசான காலத்தில் சொந்த ஊருக்குப் போவோம் என வந்துட்டேன். இப்போது, உதவித்தொகையும் இல்ல. வீட்டையும் மராமத்து செய்ய முடியல. வேலைக்கும் போக முடியல. உதவித்தொகை வந்தப்ப ரேஷன் அரிசில சாப்பிட்டேன். முன்ன மாதிரி, இப்போ என்னால சமைக்க முடியல. கையில காசும் இல்லை. உதவித்தொகை கேட்டு போனா அதிகாரிங்க விரட்டுறாங்க. உதவித் தொகை கிடைச்சா நான் ஏன் பிச்சையெடுக்கிறேன் என்றார்.

நாளைக்கே உதவித்தொகை

இதுகுறித்து அறிய, ஆட்சியர் டி.என். ஹரிஹரனை தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. நிலக்கோட்டை முதியோர் உதவித்தொகை வட்டாட்சியர் சரவணனிடம் கேட்டபோது, அந்தம்மாவுக்கு ஒரு பெண்தான். உண்மையிலேயே அவர் சிரமப்படுகிறார். நான் தற்போதுதான் புதிதாக வந்துள்ளேன். ஆட்சியருக்கும் இந்தப் புகார் சென்றுள்ளது. தகுதியான பயனாளி என்பதால், நாளைக்கே பழநியம்மாளுக்கு உதவித்தொகை கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT