சென்னையில் ஒரு தெருவில் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டால், அந்தத் தெருவில் உள்ள அனைவரையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தற்போது மொத்த பரிசோதனையில் கரோனா தொற்றுடன் இருப்போர் சதவீதம் 8 ஆக குறைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதை 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறோம்.
சென்னையில் கடந்த 14 நாட்களில் தொற்று பரவிய தெருக்கள், தொற்று இல்லாத தெருக்கள், புதிதாக தொற்று உருவான தெருக்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். இதன்படி, ஒரு தெருவில் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டால், உடனே அந்த தெருவில் உள்ள அனைவரிடமும் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.