பரோலில் வெளிவரும் கைதிகளிடம் போலீஸார் பணம் வசூலித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதை உத்தரவாதப்படுத்த சிறைத்துறை ஐஜிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி ராதாகிருஷ்ணன், மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காகவும், மகள்களின் படிப்புச் செலவுக்காகவும் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ஒரு மாத பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை முடிந்தால் மட்டுமே பரோல் என சிறைத்துறை தெரிவித்தது. குறைந்தபட்சமாக 2 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் போல் பரோல் விதி இல்லாமல் திருத்தம் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ராதாகிருஷ்ணனுக்கு 10 நாட்கள் பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பரோலில் விடுதலையாகும் கைதிகளின் பாதுகாப்புக்காகச் செல்லும் போலீஸார், கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கைதிகள், பரோலில் வரும்போது பணம் கேட்பது ஒருவகையில் லஞ்சம்தான் எனத் தெரிவித்த நீதிபதிகள், ''இதுபோன்ற செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். அது மட்டுமல்லாமல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும் உத்தரவிடப்படும்'' என எச்சரித்தனர்.
பரோலில் வரும் கைதிகளிடம் பணம் பெறக்கூடாது என்பதை உறுதி செய்யும்படி சிறைத்துறை ஐஜிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராதாகிருஷ்ணனுக்குப் பரோல் கோரி 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே மனு அளிக்கப்பட்டும், அதிகாரிகள் அதைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.
பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பிக்க எந்தக் காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். விண்ணப்பித்த ஒரு வாரத்தில் சிறை அதிகாரியும், உள்ளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரும் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதை சிறைத்துறை அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதைப் பெற்ற ஒரு வாரத்தில் அரசு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பரோல் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கத் தவறியபட்சத்தில் கைதிகளின் சட்டப் போராட்டங்களுக்கு ஏற்படும் செலவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டும்.
பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, 2 வார காலக்கெடுவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.