தமிழகம்

புகார்தாரர்களிடம் காணொலியில் பேசும் காவல் ஆணையர்: மதுரை நகரில் இன்று தொடக்கம்

என்.சன்னாசி

மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புகார்தாரர்களிடம் ஆணையர் நேரடியாக பேசும் திட்டம் இன்று அமலுக்கு வந்தது.

மதுரை காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிரேமானந்த் சின்ஹா காவல்துறையில் தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அவரது நேரடி கவனத்துக்கு வரும் புகார்களுக்கு துரித விசாரணைக்கு உத்தரவிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட, கர்ப்பிணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீதான வழக்கை மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்ய உத்தரவிட்டார்.

கரோனாவைத் தடுக்கும் வகையில், மிக அவசியமான புகார்களை மட்டுமே காவல் நிலையங்களில் விசாரிக்கவேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், தவிர்க்க முடியாத சூழலில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருவோரிடம் தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக புகார்தார்களிடம் காணொலியில் ( வீடியோ கான்ஃபரன்சிங்) பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆணையர் அலுவலகத்தில் தரைத்தளம் அருகில் கேன்டீன் பக்கத்தில் கம்ப்யூட்டர், வெப்கேமராக்கள், எல்லீடி திரைகள் பொருத்தப்படுகின்றன.

ஆணையர் அவரது இருக்கையில் இருந்தபடியே புகார்தாரர்களை தரைத்தளத்தில் அமரச் செய்து, பிரச்சினை, குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதே போன்று சட்டம், ஒழுங்கு துணை ஆணை யர்களிடம் பேசவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஆணையர் சின்ஹா கூறுகையில், ‘‘ இதன்மூலம் ஆணையர் அலுவலகத்தில் கரோனா பரவலைக் தடுக்கப்படலாம். மக்களுக்கும் புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் பேசிய திருப்தி இருக்கும். பிரச்சினை குறித்து கூடுதல் தகவலை பொது மக்களிடம் பெற முடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT