தமிழகம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் 15 பேர் மட்டுமே பங்கேற்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்தில் ஆயர், பங்குத்தந்தையர் உள்ளிட்ட 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள். பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் சாதி, மத, இன பாகுபாடின்றி பங்கேற்பார்கள்.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் நடைபெற உள்ள திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக பேராலய அலுவலகத்தில் வைத்து இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 26-ம் தேதி நடைபெறும் தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயர், பங்குதந்தையர் உள்ளிட்ட 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம். தங்கள் வீடுகளிலேயே இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பனிமய மாதா ஆலய திருவிழாவில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து ஆயர் ஸ்டீபன் கூறியதாவது: முத்துநகரின் குலதெய்வமாக கருதப்படும் பனிமய மாதாவின் பெருவிழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிபவனி, திருவிருந்து விழா, நற்கருனை பவனி, சப்பரப் பவனி ஆகியவை நடைபெறாது.

திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். கரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், தூத்துக்குடி நகரில் ஏற்படும் சிக்கல்கள் களையப்படவும் இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே அன்னையிடம் மன்றாடி இறையாசி பெற வேண்டுகிறோம் என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT