தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்ட முதற்கட்ட விதைப்பாக நிலக்கடலை பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.
‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மானாவாரி செவல் மண் நிலங்களில் ஆண்டுதோறும் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது.
ஆடிப்பட்டத்துக்கு நிலங்களை தயார்படுத்தும் வகையில், ஏற்கெனவே விவசாய நிலங்களில் சூழல் கலப்பை, சட்டி கலப்பை கொண்டு உழவு செய்து, ஆட்டு கிடை அமர்த்தி, கால்நடைகள் சாணம் போட்டு வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது கரீப் பருவம் முடியும் தருவாயில், ராபி பருவம் தொடங்க உள்ள நிலையில் ஆடிப்பட்டத்தின் முதற்பட்டமாக நிலக்கடலை பயிரிடப்படுகிறது.
இதன் மகசூல் காலம் 120 நாட்கள் ஆகும். இந்த ஜூலை மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மானாவாரி செவல் நிலங்களில் ஈரப்பதம் நன்றாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் டிராக்டர் இயந்திரம் மூலம் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, மானாவாரி நிலங்களில் பருவ காலங்களில் பயிர்களுக்கு நிகராக களை அதிகமாக வளரும்.
ஆனால், இந்தாண்டு ஏற்கெனவே நிலங்களில் தயார்படுத்தி வைத்திருந்தால் களைகள் வளர்ந்திருந்தன. அவற்றை கல் கழப்பை கொண்டு உழது, விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். மானாவாரி கரிசல் நிலங்களில் ஆகஸ்ட் மாத இறுதியில் மக்காச்சோளமும், செப்டம்பர் முதல் வாரத்தில் உளுந்து, பாசி, சோளமும் பயிர் தொடங்குவோம், என்றார் அவர்.
கொள்முதல் செய்ய வேண்டும்
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட உளுந்து, பாசி, மக்காச்சோளம் ஆகியவற்றை நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் வீட்டில் சேமித்து வைத்துள்ளனர்.
இதில், கரோனா ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. தற்போது எலி தொல்லை அதிகமாக உள்ளதால், அவை விளை பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் பாதுகாத்து வைத்துள்ள விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலையை அரசு நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.