மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா மரணத்தைப் போல கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்; ஸ்டாலின்

செய்திப்பிரிவு

கொள்ளை நோயை வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைக்கூட்டத்தை வைரஸைப் போல விரட்டுவதற்குச் சூளுரைப்போம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 23) 'மரணத்திலும் பொய்க் கணக்கு' என்ற தலைப்பில் காணொலி உரையை வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்டாலின் பேசியதாவது:

"மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத் தான் இருக்கும். இது மாதிரியான கொலை பாதக ஆட்சியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை; இனியும் பார்க்கவும் முடியாது!

'மூன்று நாட்களில் கரோனா ஒழிந்துவிடும், பத்து நாட்களில் கரோனாவை அழித்து விடுவேன்' என்று பொய்ச் சவால்களை விட்டு வந்த பழனிசாமி ஆட்சியில் கரோனா நோய்த் தோற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3,144 ஆகிவிட்டது.

நேற்று (ஜூலை 22) வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால், ஒரே நாளில் எப்படி 3,144 எப்படி ஆனது?

இதுவரையில் மறைத்து வைத்த மரணங்களை இனியும் மறைக்க முடியாமல் வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மரணமடைந்தவர் உடல் எவ்வளவுதான் மறைத்தாலும் ஒருவாரத்தில் வெளியே தெரிய ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். மறைப்பது அரசாங்கமாக இருந்ததனால் இரண்டு மாதம் வரையில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

நேற்றைய தினம் இந்த அரசாங்கம் சொன்ன ஒரு விஷயத்தை என்ன காரணம் சொன்னாலும், நியாயப்படுத்தவே முடியாது. அவ்வளவு கொடுமையான விஷயம் அது! ‘மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது. அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளோம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? மார்ச் 1-ம் தேதியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் தினமும் பொய் சொல்லி கொண்டு வந்திருக்கிறார்கள்! அதுதான் உண்மை.

மரணத்தை இந்த அரசாங்கம் மறைக்கிறது என்று ஜூன் 15-ம் தேதி அன்றைக்கே நான் சொன்னேன்.

கரோனாவால் இறந்தவர் மரணம் மறைக்கப்படுகிறது என்று ஊடகங்கள் ஜூன் முதல் வாரமே மெல்ல எழுத ஆரம்பித்தன. இதற்கு உரிய விளக்கத்தை அரசாங்கம் சொல்ல வேண்டும் என்று நானும் கேட்டேன்.

நான் அரசியல் செய்கிறேன் என்று சொல்லி, பதில் சொல்ல மறுத்தார்கள்.

'தமிழ்நாட்டில்தான் மரண விகிதம் குறைவு' என்று தன்னுடைய சாதனை மாதிரி முதல்வர் சொன்னார்.

இறப்பைச் சாதனையாக சொன்ன முதல் ஆள் இவராகத்தான் இருப்பார்.

இவர் சொல்வது பொய் என்று அரசாங்கம் சொன்ன புள்ளிவிவரத்தின் மூலமாகவே தெரியவந்தது.

சென்னையில் மொத்தம் 460 பேர் இறந்ததாக ஜூன் 9-ம் தேதி சென்னை மாநகராட்சி கூறியது. ஆனால், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை 224 பேர்தான் இதுவரை சென்னையில் இறந்ததாக சொன்னது. அப்படி என்றால் மரணம் அடைந்த 236 பேர் யார்? அவர்கள் என்ன நோயால் இறந்தார்கள் என்று நான் கேட்டேன். மக்கள் நல்வாழ்வுத் துறையும் சென்னை மாநகராட்சியும் தமிழக அரசாங்கத்தின் இரண்டு பிரிவுகள்தான். அவர்களே இரண்டு விதமாகச் சொன்னார்கள். இதைவிட கேவலம் என்ன இருக்க முடியும்?

'236 உயிர்களின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது" என்று நான் அப்போதே குற்றம் சாட்டினேன்.

'இது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல; நடைமுறைப் பிரச்சினைதான்' என்று அன்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்தவர் சொன்னார்.

236 பேரின் மரணத்தை நடைமுறை பிரச்சினைதான் என்று அந்த அதிகாரி சொன்னார்.

இதைப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, 'இறப்பு தகவலை மறைக்க முடியாது; பத்திரிகைகள் உட்பட அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்' என்று மகாயோக்கியரைப் போலச் சொன்னார். எந்தத் தவறும் நடக்கவில்லை என்று முதல்வர் சொன்னார். ஆனால், இந்த விவகாரம் மத்திய அரசு வரையில் சென்று, அங்கிருந்து விசாரணை நடத்தியதாக சொன்னார்கள். அதனால் இதுபற்றி விசாரணைக் குழு அமைப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சொன்னார். அப்படி சொன்னதற்காகவே அவரைப் பணியிடமாற்றம் செய்தார் முதல்வர்.

பீலா ராஜேஷ் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்த வரையில், 236 மரணங்கள் மட்டுமே மறைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். இப்போது ராதாகிருஷ்ணன் வந்தப் பிறகு 444 மரணங்கள் இதுவரை மறைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முதல்வருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்குப் பயந்துகொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர்கள் மறைத்துள்ளார்கள்.

பரிசோதனை பண்ணாதே...

கரோனா தொற்றை அதிக எண்ணிக்கையாக சொல்லாதே...

மரணத்தை காட்டாதே...

- என்று முதல்வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அதுதான் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் அக்கறை இவர்களுக்கு இல்லை; கரோனா பரவல் இல்லை என்று மறைத்தால் போதும்.

கரோனாவால் மரணம் அடைபவர்களைக் காப்பாற்றும் அக்கறை கிடையாது; ஆனால், மரணத்தை மறைத்தால் போதும்.

இப்படி நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்!

மே 28-ம் தேதி இறந்த ஒருவரின் மரணம் ஜூன் 7-ம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வருகிறது.

மே 24-ம் தேதியில் இருந்து ஜூன் 7-ம் தேதி வரை மரணமடைந்த ஏழு பேரின் மரணங்கள் ஜூன் 15-ம் தேதி செய்திக்குறிப்பில் வருகிறது.

மார்ச் 1-ம் தேதியிலிருந்து ஜூன் 10-ம் தேதி வரை மரணமடைந்த 444 பேரின் மரணங்கள் ஜூலை 22-ம் தேதி செய்திக்குறிப்பில் வருகிறது என்றால், இதுதான் அரசாங்கம் நடத்தும் லட்சணமா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் கரோனாவே இல்லை என்று முதலில் மறைத்தது தமிழக அரசு. இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை மறைகிறது. மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம்?

மரணத்தை மறைத்தார்கள்; இப்போது மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதும், வேறு வழியில்லாமல் வெளியில் சொல்லி விட்டார்கள்.

இவர்களது அரசியல் லாபங்களுக்கு மக்களை பலியிடுகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறேன்.

"தமிழகத்தில் கரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை. கரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை" என்று முதல்வர் பழனிசாமி சொன்னது பொய் என்று இப்போது அரசாங்க அறிக்கையே மெய்ப்பித்து விட்டது.

அப்பாவி மக்களின் மரணத்தை மறைத்த பழனிசாமி, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுவரை அவர் எத்தனையோ பொய்கள் சொல்லி இருந்தாலும், இப்போது சொன்னது மக்களின் உயிருடன் விளையாடியது ஆகும். எனவே, அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

கரோனா பரவ தொடங்கியது முதல் இன்றுவரை இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக, மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு இந்த அரசாங்கம் உண்மையாக இருப்பதாகச் சொல்ல முடியும்.

ஐ.சி.எம்.ஆர். பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகளைச் சொல்லி வருகிறது. அதுபடித்தான் இந்த அரசாங்கம் நடக்கிறதா என்றால், இல்லை. ஐ.சி.எம்.ஆர். நெறிமுறைகளை மக்களுக்குச் சொல்லி அதன்படிதான் அரசு நடப்பதாக உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும். சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? இல்லையா, பரிசோதனை எண்ணிக்கையை மாவட்டவாரியாக கொடுங்கள் என்று நான் தினமும் கேட்டேன். சரியான பதில் இல்லை. 'சமூகத்தின் கடைசிவரை கரோனா போய்விட்டது. அதன் பிறகும் சமூகப் பரவல் இல்லை என்று சொல்வது மகா மோசடி' என்று மூத்த ஆராய்ச்சியாளர் ஜெயபிரகாஷ் சொல்லி இருக்கிறார்.

கரோனா மரணங்களில் மர்மம் உள்ளது என்பது குறித்து நான் சொன்னபோதெல்லாம் அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று எரிந்து விழுந்தார்கள் தமிழ்நாட்டு அமைச்சர்கள்.

இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன. இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

கரோனா மரணத்தைப் போல கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். ஒரு கொள்ளை நோயை வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைக்கூட்டத்தை வைரஸைப் போல விரட்டுவதற்குச் சூளுரைப்போம்!"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT