தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.20 கோடி யில் 2 புதிய திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரி வித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பி.தங்க மணி பேசியதாவது:
சுற்றுச்சூழலை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குளோரைடு நீக்கும் திட்டம் மற்றும் கொதிகலனில் இருந்து வெளியேறும் வெண் புகையை குளிர்விக்கும் திட்டம் ரூ.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும். காகிதக்கூழ் தயாரிப்பில் நுண்துகள்களின் ஈரத்தன்மையை குறைக்க ‘ஸ்குரூ பிரஸ்’ இயந்திரம், கூடுதல் அழுத்த உருளை, கனரக இயந்திரங்கள் ரூ.7.50 கோடியில் நிறுவப்படும்.
தமிழ்நாடு சிமென்ட் நிறுவன அரியலூர் ஆலைக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய எக்ஸ் ரே பகுப்பாய்வு கருவி, பழைய காற்றழுத்திக்கு பதிலாக சக்கரம் பொருத்தப்பட்ட திருகு விசை காற்றழுத்தி (ஸ்குரூ கம்ப்ரசர்) ரூ.15 லட்சம் செலவில் வாங்கப்படும். ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் சுற்றுப்புற காற்றின் தன்மையை அளவிடும் மையம், புகைபோக்கி கண் காணிப்பு கருவிகள் ரூ.1.60 கோடியில் நிறுவப்படும்.
ராமநாதபுரம், மாரியூர் வாலிநோக்கம் கூட்டு உப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 120 டன் உற்பத்தி திறன் கொண்ட புரோமின் தொழிற்சாலை ரூ.3 கோடியில் நிறுவப்படும். வாலிநோக்கத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை கண்காணிக்க இணையதள தொடர்புடன் கூடிய கேமரா, உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு மின்னணு வருகைப் பதிவேடு கருவி ஆகியவை ரூ.20 லட்சத்தில் அமைக்கப்படும்.
சர்க்கரை ஆலைகள்
ஒரு பொதுத்துறை மற்றும் 7 கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளில் சுழல் சல்லடை நிலையத்தின் திறனை மேம் படுத்தி, கழிவுப்பாகு மேலேற்று தொட்டிகளில் ரூ.64 லட்சத்தில் தானியங்கி கருவிகள் பொருத் தப்படும்.
சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் சுரங்க விரிவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஒரு கனரக லாரி, 3 தண்ணீர் தெளிப்பதற்கான லாரி, ஒரு புல்டோசர் ஆகியவை ரூ.1.86 கோடியில் வாங்கப்படும். தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் வெர்மிடைல் எனும் வெப்பம் தாங்கி கூரைஓடுகள் மற்றும் கிராபிடைல் எனும் நடைபாதை ஓடுகளை உற்பத்தி செய்ய ரூ.50 லட்சம் செலவில் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றார்.