தமிழகம்

ஈரோட்டில் ரூ.100 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிப்பு: கரோனா ஊரடங்கால் வியாபாரிகள் வேதனை

செய்திப்பிரிவு

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கும் கனி ஜவுளிச்சந்தை செவ்வாய்கிழமை வரை நடைபெறும். இந்த சந்தையில், அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்தும், கேரள, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் மொத்தக் கொள்முதல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வாரந்தோறும் ஜவுளிச்சந்தையில் ரூ.3 கோடி வரையிலும், பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரையிலும் விற்பனை நடைபெறும்.

கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கனி ஜவுளிச்சந்தை முறையாக இயங்கவில்லை.

மேலும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வருகை வெகுவாகக் குறைந்து விட்டதால் 10 சதவீதம் விற்பனை கூட நடக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 மாதமாக விற்பனை முடக்கம்

இதுகுறித்து ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறும்போது, ஈரோட்டில் கனிஜவுளிச்சந்தை, அசோகபுரம் ஜவுளிச்சந்தை, சென்ட்ரல் திரையரங்கு அருகே ஒரு ஜவுளிச்சந்தை என மூன்று சந்தைகள் செயல்படுகின்றன. இவற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணியால் ஏற்கெனவே கனி ஜவுளிச்சந்தையின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஐந்து மாதமாக விற்பனை முடங்கியுள்ளது. ரயில்கள் இயங்காததால் வெளிமாநில வியாபாரிகள் வருகை முற்றிலுமாக தடைபட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்தில் ரூ.100 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT