தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல்பெற்றதுடன், கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதம்:
தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.‘ஊக்கத்தை தவிர வேறு எதையும் நிலையான கடமை என்று கூற இயலாது’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்கவும், ‘லட்சியத்தில் உறுதி’ என்ற குறிக்கோளுடனும், தமிழக மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அரசு, குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைத்தது. இதற்கு என்னைப் பாராட்டி தாங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன.
மூத்த அரசியல்வாதியும், எம்ஜிஆரின் இதயத்தில் இருந்தவருமான தாங்கள் என்னை பாராட்டி வாழ்த்தியதற்கு எனதுநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பல்லாண்டு, நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.