தமிழகம்

விசாரணையின்போது இலங்கைத் தமிழர் மரணம்: போலீஸார் மீது நடவடிக்கை கோரி மறியல்

செய்திப்பிரிவு

சென்னையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மோகன் என்கிற இலங்கைத் தமிழர் நேற்று அதிகாலை மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி விசாரணை கோரியும் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மேடவாக்கம் சவுமியா நகரில் வசித்து வந்தவர் மோகன்(42). இலங்கைத் தமிழரான இவர், இங்கு வியாபாரம் செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு பாஸ்போர்ட் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மோகன் இறந்துவிட்டதாக பள்ளிக் கரணை போலீஸார் அவரது உறவி னர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த மோகனின் உறவினர் கள் அவரது உடல் வைக்கப் பட்டிருந்த ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை முன்பு திரண்டனர். விடுதலை சிறுத்தை கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

“மோகன் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட வேண் டும். குற்றம்புரிந்த காவல்துறையி னரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது” என்று கூறி அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

நேற்று மாலைவரை மோகன் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யாததால் அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுடன் மோகனுக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டிலிருந்து 3 போலி பாஸ்போர்ட்கள், 20 போலி விசாக்கள் 2 லாப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அவர் விசா ரணைக்காக பள்ளிக்கரணை போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் மோகன் மயக்கம் வருவதாக தெரிவித்தார். அவரை அருகி லுள்ள தனியார் மருத்துவ மனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இரவு 3 மணியள வில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசா ரணை நடத்தி பிரேத பரிசோ தனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நீதிவிசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT