சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நியமனத்தில் அதிருப்தி நிலவுவதால், கவுன்சிலர்கள் சிலர் ராஜினாமா செய்யப்போவதாக அமைச்சர் ஜி.பாஸ்கரனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தற்போதே தொடங்கிவிட்டன.
இதற்காக உள்கட்சியில் சில மாற்றங்களை இருகட்சிகளும் செய்து வருகின்றன. திமுகவை போன்று அதிமுகவிலும் ஒன்றியச் செயலாளர் பதவிகள் பிரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் சிவகங்கை, கல்லல், இளையான்குடி, காளையார்கோவில், சிங்கம்புணரி உள்ளிட்ட ஒன்றியங்களில் ஒன்றியச் செயலாளர் பதவிகள் பிரிக்கப்பட்டன.
இதில் அதிமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் இன்று சிங்கம்புணரி தெற்கு ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெகனை மாற்ற வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனை சந்தித்து தெரிவித்தனர்.
மேலும் ஒன்றியச் செயலாளரை மாற்றாவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக இளங்குமார், சசிக்குமார், பெரியகருப்பிமுத்தன் ஆகிய மூன்று ஒன்றியக் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
தற்போது சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் அதிமுகவிற்கு 6 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. இதில் 3 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தால் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை அதிமுக இழக்க நேரிடும். இதனால் இருத்தரப்பினரிடமும் அமைச்சர், மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.