தமிழகம்

குமரியில் வேகமாகப் பரவும் கரோனாவால் அடுத்தடுத்து மூடப்படும் அரசு அலுவலகங்கள்: தொற்று எண்ணிக்கை 3000-ஆக அதிகரிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக கரோனா பரவி வருவதால் அரசு அலுவலகங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 3 ஆயிரம் பேராக உயர்ந்தது.

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் மாவட்டத்தில் கன்னியாகுமரியும் ஒன்று. இங்கு முதலில் கட்டுக்குள் இருந்த கரோனா இந்த மாத தொடக்கத்தில் இருந்து வேகமாக பரவி வருகிறது. தினமும் 100 பேர் முதல் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மாவட்டம் முழுவதும் காவல்துறையில் ஏ.எஸ்.பி. முதல் போலீஸ்காரர் வரை இதுவரை 37 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கரோனா தொற்று போலீஸாருக்கு ஏற்பட்ட 10 காவல் நிலையங்கள் மூடிய நிலையில் இன்று 11-வதாக நேசமணிநகர் காவல்நிலையம் மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய ஏட்டிற்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைப்போல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சமையல் பணியில் இருந்த ஊழியருக்கு கரோனா ஏற்பட்டதை தொடர்ந்து உணவு தயாரிப்பு கூடம் மூடப்பட்டது. நாகர்கோவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மூடப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டது. நாகர்கோவில் சிறையில் கைதி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பிற கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டது. இதில் 18 கைதிகள், சிறை காவலர் ஆகியோருக்கு கரோனா தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கைதிகள் குழித்துறை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதைப்போல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பெரும்பாலான அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய தீயணைப்பு வீரர் 2 பேருக்கு கரோனா ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது.

இதைப்போல் மாவட்டத்தில் அடுத்தடுத்து கரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இன்று மேலும் 142 பேருக்கு கரோனா ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3000 பேரை தாண்டியது. 23 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT