மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் புலவர்சேரி கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. 
தமிழகம்

மானாமதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தேர்தல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் ஊராட்சி புலவர்சேரி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய் மூலம் 300 பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் அக்கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் தூர்வார ரூ.72 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள இருத்தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இதனால் தேர்தல் நடத்தி பெரும்பான்மை நிரூபிக்கும் விவசாயி சங்கத்திற்கு பணி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடத்தாமலேயே ஒருத்தரப்பினர் பணி செய்ய ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தேர்தல் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. வட்டாட்சியர் பஞ்சாபகேசன் தலைமை வகித்தார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்விழி, சுரேஷ் முன்னிலை வகித்தனர். தேர்தலில் தலைவராக கணபதியம்மாள், பொருளாளராக கார்மேகம் தேர்வாகினர். மோதல் ஏற்படாமல் இருக்க கூட்டத்தை போலீஸார் கலைத்தனர்.

SCROLL FOR NEXT