கோவை மாநகராட்சிப் பகுதி மக்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதைக் கண்டித்தும், குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகக் குழுக் கூட்டம், மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் காணொலிக் காட்சி மூலம் இன்று (ஜூலை 22) நடைபெற்றது. குடிநீர் பிரச்சினை தொடர்பாக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து நா.கார்த்திக் எம்எல்ஏ கூறியதாவது:
"கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும், மிகவும் குறைந்த அழுத்தத்துடன், குறைந்த அளவு நீரே விநியோகிப்பதால், வரலாறு காணாத வகையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் உயிர்நாடியாகத் திகழும் குடிநீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்போக்கையே கடைப்பிடிக்கிறது.
இது தொடர்பாக மாநகராட்சி உயரதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது, குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறையாவது, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள், நகர் நலச் சங்க நிர்வாகிகள், சமூகநல ஆர்வலர்கள் வீடுகளின் முன்பு வரும் 29-ம் தேதி கறுப்புக் கொடியேற்றுவதுடன், காலிக் குடங்களுடன் கோவை மாநகராட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.