சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 3 போலீஸார் ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீஸார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் காவலர்கள் வெயில்முத்து, சாமிதுரை, செல்லத்துரை ஆகியோரை நாளை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் அனுமதி பெற்றனர். கடந்த 2 நாளாக 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்த சிபிஐ அதிகாரிகள் இருவர் மற்றும் கைதான காவலர்களில் ஒருவர் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஒரு நாள் முன்னதாகவே 3 காவலர்களும் இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேரையும் ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் முருகன், தாமஸ் பிராங்ளின், முத்துராஜா ஆகியோர் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் முருகன் மனு நாளையும், மற்ற இருவரின் ஜாமீன் மனுக்கள் 24-ம் தேதியும் விசாரணைக்கு வருகிறது.