இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தை இழிவுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவோரைக் கண்டித்து விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை இழிவுபடுத்தி தரம் தாழ்ந்த முறையில் அவதூறான படங்கள் மற்றும் செய்தி வெளியிட்டதோடு, முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவையும், பெண்ணியச் செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி ஆகியோரையும் இழிவுபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவோரைக் கண்டித்து இன்று (ஜூலை 22) விழுப்புரத்தில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆற்றரலரசு, மதிமுக மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் அமீர் அப்பாஸ் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.