தமிழகம்

நலவாரியங்களில் 54 ஆயிரம் பேர் இணையவழியில் விண்ணப்பம்: அமைச்சர் நிலோஃபர் கபீல் தகவல்

செய்திப்பிரிவு

அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணையதளம் வாயிலாக நலவாரியங்களில் பதிவு செய்யும் வசதி மூலம் இதுவரை 54 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் நிலோஃபர் கபீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக தொழிலாளர் துறையின் கீழ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உட்பட 17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் இயங்கி வருகின்றன.

இந்த வாரியங்களில் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்ய மாவட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே http://labour.tn.gov.in’ என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்கள் பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்யும் வசதி கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொண்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜூலை 20-ம் தேதி முதல் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.ஜூலை (நேற்று 21) வரை தமிழகத்தில் 17 அமைப்பு சாரா நலவாரியங்களில் 54,255 தொழிலாளர்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிலோஃபர் கபீல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT