நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தபிறகே நீதிமன்றம் திறப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர்ந்து தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுதா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் உள்ளிட்டோர் நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியிடம் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு தலைமை நீதிபதி, "நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தபிறகே நீதிமன்றங்களை திறப்பது குறித்து முடிவு செய்ய முடியும்" எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளதாகவும் காணொலி விசாரணையில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்றும் வீட்டில் இருந்தவாறு ஆஜராக முடியாதவர்களுக்கு நீதிமன்றத்தில் தனி இணையதள அறை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.