கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதையும், கடைகளில் கிருமிநாசினி (Sanitizer) வைத்திருப்பதையும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அங்காடி மேலாண்மைக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டத்தை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் மாநகராட்சி கோட்ட உதவிப் பொறியாளர் (அ) இளநிலைப் பொறியாளரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, காவல்துறை பணியாளர், மீன்வள உதவி ஆய்வாளர் (மீன் அங்காடியைப் பொறுத்தவரை மட்டும்), சம்பந்தப்பட்ட அங்காடிகளிலிருந்து மூன்று பிரதிநிதிகளை உள்ளடக்கிய 79 அங்காடி மேலாண்மைக் குழுக்கள் (Market Management Committee) அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வட்டாட்சியர்/ சிறப்பு வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்காடி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ், தலைமையில் இன்று (21.07.2020) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அங்காடிகளின் செயல்பாட்டினை தினமும் கண்காணித்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதையும், அங்காடியின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கைகழுவுவதற்கான கிருமிநாசினி (Sanitizer) வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத அங்காடிகள் மற்றும் மார்க்கெட் வளாகத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''பெருநகர சென்னை மாநகராட்சியில் 5.50 லட்சம் RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்த முதல் மாநகராட்சியாகும். நாளொன்றுக்கு 15,000 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பரிசோதனைகளை அதிகரித்து சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல் போன்ற பணிகளின் காரணமாக நோய்த்தொற்று விகிதம் குறைந்து வருகிறது. அதேபோன்று சிகிச்சை பெற்று குணமடையும் விகிதம் 80% ஆக உள்ளது. மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறியுள்ள நபர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து முடிவுகள் வரும்வரை காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமணையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவசர சிகிச்சை, திருமணம் மற்றும் இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்கான பயண அனுமதி கோரிய தனிநபர்களின் மனுக்களில் 4,92,149 மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, 1,61,754 மனுக்கள் ஏற்கப்பட்டு பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3,29,829 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 566 மனுக்கள் ஆய்வில் உள்ளன. பிற மாவட்டங்களிலிருந்து அவசரப் பயண அனுமதி பெற்று சென்னை வரும் நபர்கள் தனிமைப்படுத்தும் மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், வட்டார துணை ஆணையாளர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள், உதவி/ இளநிலைப் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.