தமிழகம்

தினமும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும் நிலையில் மதுரையில் குறையும் கரோனா பரவல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் தினமும் சராசரியாக 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில், தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.

மதுரையில் ஆரம்பத்தில் ‘கரோனா’ பாதிப்பு நோயாளிகள் தினமும் ஒற்றை இலக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டனர். சில நாட்கள் தொடர்ந்து அதுவும் கூட இல்லாமல் இருந்தது.

ஊரடங்கு தளர்வையடுத்து வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து இடம்பெயர்ந்தோர் அதிகளவு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இவர்கள் மூலம் தென் மாவட்டங்களில் ‘கரோனா’ தீவிரமடைய தொடங்கியது. அதுபோல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட முக்கிய காய்கறி, மளிகை சந்தைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு வந்த லாரி ஓட்டுனர், கிளீனர்கள் மூலம் வியாபாரிகளுக்கு பரவியது. அதனால், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தவர்களுக்குக் கூட கரோனா தொற்று ஏற்படத் தொடங்கியது.

மதுரை மாநகராட்சியில் ஒரு வார்டு விடாமல் அனைத்து வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு கரோனா பரவியது. மாவட்டத்தில் இதுவரை 8,357 பேருக்கு ‘கரோனா’ தொற்று ஏற்பட்டதில் 70 சதவீதம் மாநகராட்சிப் பகுதியை சேர்ந்தவர்கள்.

தற்போது வரை மாநகராட்சியில் 2,053 ‘கரோனா’ நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு டெலி மெடிசன் முறையில் சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த ஒன்றரை மாதமாக தினமும் 250 முதல் 350 வரை சராசரியாக தினமும் மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ நோயாளிகள் கண்டறியப்பட்டனர். தற்போது கடந்த சில நாட்களில் நோய்த் தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

கடந்த 11ம் தேதி 277, 12ம் தேதி 319, 13ம் தேதி 464, 14ம் தேதி 450, 15ம் தேதி 341, 16ம் தேதி 267, 17ம் தேதி 263, 18ம் தேதி 185, 19ம் தேதி 206 என்று ‘கரோனா’ நோயாளிகள் தொற்று கண்டறியப்பட்டநிலையில் நேற்று 20-ம் தேதி 106 ஆக குறைந்தது. இன்று சற்றே அதிகமாக 158 என்றளவில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆரம்பத்தில் 250 பேருக்கும், கடந்த 2 வாரத்திற்கு முன் வரை 1,500 முதல் 2,000 பேர் வரைக்கும் மட்டுமே கரோனா பரிசோதனைக்கு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது தினமும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடக்கிறது. சில நாட்கள் 5 ஆயிரம் பேர் வரையும் பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் தொற்று கண்டறியப்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

SCROLL FOR NEXT