கோவையில் செயல்படும் சிறு தங்க நகைப் பட்டறை | கோப்புப் படம். 
தமிழகம்

கோவையில் சிறு, குறு தங்க நகைப் பட்டறைகள் நாளை முதல் செயல்படும்

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவையில் சிறு, குறு தங்க நகைப் பட்டறைகள் நாளை (ஜூலை 22) முதல் செயல்படும் என்று பொற்கொல்லர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை பொற்கொல்லர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம்.கமலஹாசன் இன்று (ஜூலை 21) கூறும்போது, "கோவையில் தங்க நகை தயாரிப்புத் தொழில் மிகவும் பிரசித்தி பெற்றது. குறைந்த எடையில், பெரிய அளவிலான நகைகளை, சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் கோவை நகைக்கு, உலகெங்கும் வரவேற்பு உண்டு.

கடந்த 70 ஆண்டுகளில் இத்தொழில் பெரிதும் வளர்ச்சியடைந்தது. தற்போது ஆண்டுக்கு சுமார் 70 டன் அளவுக்கு கோவையில் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நிறைய வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர், தங்க நகைத் தொழிலை நம்பியுள்ளனர்.

எஸ்.எம்.கமலஹாசன்

இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக, மாநகராட்சி அறிவுறுத்தல்படி கோவையில் உள்ள அனைத்து சிறு, குறு நகைப் பட்டறைகளும் கடந்த 6-ம் தேதி மூடப்பட்டன. மீண்டும் பட்டறைகள் இயங்க அனுமதிக்குமாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில், நாளை (ஜூலை 22) முதல் சிறு, குறு நகைப் பட்டறைகள் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் தங்க நகைப் பட்டறைத் தொழிலாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவர்" என்றார்.

SCROLL FOR NEXT