ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் கொல்லிமலையில் நடக்கவிருந்த 'வல்வில்' ஓரி விழாவை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் சிறந்து விளங்கியதால், ஓரி மன்னன் 'வல்வில்' என்ற அடைமொழியுடன் 'வல்வில்' ஓரி என அழைக்கப்பட்டு வந்தார். அவரது புகழைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி மாதம் 17, 18-ம் தேதிகளில், கொல்லிமலை செம்மேடில் 'வல்வில்' ஓரி விழா தமிழக அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
விழாவில் கொல்லிமலை மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெறும். மேலும், அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். விழாவுக்குக் கொல்லிமலை மக்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதனால், இரு தினங்களும் கொல்லிமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டதுபோல் இருக்கும். இதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 1, 2-ம் தேதி 'வல்வில்' ஓரி விழா நடத்தப்படுவதாக இருந்தது.
இதனிடையே, கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 'வல்வில்' ஓரி விழாவை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், விழாவில் ஓரி மன்னன் நினைவாக நடத்தப்படும் வில் வித்தைப் போட்டி, தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர்க் கண்காட்சி உள்ளிட்டவற்றையும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது கொல்லிமலை வாழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.