திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ மற்றும் திமுகவினர். 
தமிழகம்

மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆர்.கிருஷ்ணகுமார்

மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பீளமேடு அண்ணா நகரில் இன்று (ஜூலை 21) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதேபோல, மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் கோவைப்புதூரிலும், புறநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் மேட்டுப்பாளையத்திலும், புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் பொள்ளாச்சியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கரோனா பரவல் ஊடரங்கு காலத்தில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், மின் கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வலியுறுத்தியும், மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் கட்சியினர் கறுப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலர் க.செல்வராஜ் தலைமையில் திருப்பூரிலும், மாநகர திமுக சார்பில் தென்னம்பாளையம் காட்டுவளவில் மாநகரச் செயலர் மு.நாகராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்டச் செயலர் பா.மு.முபாரக் தலைமையிலும், உதகையில் துணைச் செயலர் ஜே.ரவிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் கறுப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT