நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த மாதம் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள், விழாக்களுக்குச் சென்று வந்ததால் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து தொற்று அதிகரித்தது.
கடந்த 35 நாட்களில் மட்டும் புதிதாக 500 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 20) வரை மொத்தம் 513 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு வருகின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் சமூகப் பரவல் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனால், வணிகர்களே முன் வந்து காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் திறக்கின்றனர்.
மேலும், வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் அல்லாத முழு முடக்கம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் மக்களிடம் கரோனா பரிசோதனை செய்ய நடமாடும் பரிசோதனை வாகனங்கள் இயக்கம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது, "நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் 513 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 18 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் நகரப் பகுதிகள் மட்டுமின்றி அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று அனைத்து மக்களுக்கும் சோதனை செய்யப்படுகிறது.
திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், திருமணத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட காரணத்தினாலேயே நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை உதகை அருகே உள்ள தங்காடு ஓரநள்ளி பகுதியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களால் தொற்று அதிகரித்துள்ளது. எனவே, அங்கு அனுமதியை மீறி கூட்டம் கூட்டியதால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் இனி பொது நிகழ்ச்சிகள் மூலம் கூட்டங்கள் கூட்ட முற்றலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 60 மாதிரிகள் எடுத்துப் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தற்போது பரிசோதனை 4 மடங்கு அதிகரித்து நாள் ஒன்றுக்கு 240 மாதிரிகள் உதகை அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்படுகின்றன. தொற்று உறுதியானவரின் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்கள் 30 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று 1.7 சதவீதமாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் உட்பட பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.