காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜூலை 21) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் தரப்பில் கூறியதாவது: டீசல் விலை உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மீன்களை கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கான மானியத்தை உயர்த்தித் தர வலியுறுத்தியும், மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வருமான சான்று கேட்பதற்கு கண்டனம் தெரிவித்தும் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் 4,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை.