கரூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி கட்டிடத்தை இடிப்பது தெடார்பான கரூர் நகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த செல்வ நன்மாறன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கரூரில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இப்பள்ளியில் பயில்கின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி கட்டிடத்தை இடிக்க கரூர் நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளி கட்டிடத்தை இடிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாகவும், கரூர் மாவட்டத்தில் மோசமான நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடங்கள் குறித்தும் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.