அறந்தாங்கி அருகே கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து ஊர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியைச் சேர்ந்த 55 வயதுள்ள ஜோதிடர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், அவரது குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்ததில் அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜோதிடர் குணமடைந்தார். அதையடுத்து இன்று (ஜூலை 20) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனை வாகனம் மூலம் ஊர் திரும்பினார்.
அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், கிராம மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அவருக்கு மாலை அணிவித்து மேளதாளங்களுடன் கடை வீதியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.