மதுரை செல்லூரைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் கர்ணன் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 82.
தொழில் ரீதியாகத் தையல் கலைஞரான இவர், வாடகை வீட்டில் இருந்தபடியே எழுதிக் குவித்தவர். மணிக்கொடி காலத்து எழுத்தாளரான இவர் 7 நாவல்களும், 10 சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு வரலாற்று நூல்களும், ஒரு கவிதை நூலும் எழுதியிருக்கிறார். மறக்கப்பட்ட எழுத்தாளர்கள் குறித்து நிறையக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
போலியோவால் பாதிக்கப்பட்ட போதிலும் சொந்த உழைப்பில் வாழ்ந்த கர்ணன், வாய் பேச முடியாத இரு சகோதரிகளையும் கவனித்து வந்தார். இவரது மனைவி ரஞ்சிதம் கடந்த 2012-ம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார். இவரது இறுதிச் சடங்குகள் மதுரை சுயராஜ்ய புரம் 4-வது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
நாளை மதியம் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று எழுத்தாளர்கள் உஷா தீபன், அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.