இளைய தலைமுறைக்குச் சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் வரலாற்றைக் கொண்டுசெல்வது அவசியம் என்று கோவை ஜெய்ஹிந்த் அறக்கட்டளைத் தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் கூறினார்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப்படும் சிப்பாய்க் கலகத்துக்குக் காரணமானவர் மங்கள் பாண்டே. இவரது 193-வது பிறந்த நாள் விழா, கோவையில் இன்று நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்து ஜெய்ஹிந்த் அறக்கட்டளைத் தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் பேசும்போது, "உத்தரப் பிரதேச மாநிலம் நக்வா கிராமத்தில் 1827-ல் பிறந்த மங்கள் பாண்டே, 1857-ல் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றார். தொடர்ந்து ஏற்பட்ட கலவரமே இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாகும்.
தேச விடுதலைக்காக மங்கள் பாண்டே போல இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் குறித்த வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசெல்வது அவசியம். எவ்வளவு பாடுபட்டு இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை உணர்ந்தால்தான் தேச நலன், சமூக அக்கறை மிகுந்த இளைய தலைமுறை உருவாகும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நல ஆர்வலர் கோதானவல்லி, சகோதரத்துவப் பேரவை நிர்வாகிகள் சதீஷ், கே.ஜி.ராமகிருஷ்ணமூர்த்தி, ஜான்பீட்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.