தமிழகம்

குமரியில் தனிமை வார்டுகளில் தளர்ந்து போன கெடுபிடிகள்: சமூகவலைதளங்களில் வைரலான இளைஞர்களின் நடனம்

எல்.மோகன்

கன்னியாகுமரியில் கரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வரும் வாலிபர்கள் ஒன்றுகூடி தனிமனித இடைவெளியின்றி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வகையில் இப்படி ஆடிப்பாடுவதை அனுமதித்தாலும், கெடுபிடிகள் தளர்ந்து தனிமை வார்டுகளில் உள்ளவர்கள் வெளியில் சர்வ சாதாரணமாகச் சுற்றித்திரிவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.

தினமும் 100 பேர் முதல் 200 பேர் வரை கரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் நிலஅபகரிப்பு பிரிவு எஸ்.ஐ., தக்கலை டி.எஸ்.பி. அலுவலக பெண் போலீஸ், நாகர்கோவில் வடசேரி ஆம்புலன்ஸ் ஓட்டுனர், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், சுகாதார ஆய்வாளர் உட்பட இன்றும் 132 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2650-ஐ தாண்டியுள்ளது. இறந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிற்கு 1200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாகர்கோவில் உட்பட கரோனா தனிமை வார்டுகளில் கட்டுப்பாடுகள் தளர்வு நிலையில் உள்ளது.

குறிப்பாக கரோனா தனிமை வார்டுகளில் இருந்து நோயாளிகள் சுதந்திரமாக வெளியே வந்து கடைகள், ஓட்டல்களுக்கு வந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசாரிப்பள்ளத்தில் பள்ளி ஒன்றில் செயல்படும் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வரும் வாலிபர்கள் ஒன்றாகக்கூடி தனிமனித இடைவெளியின்றி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT