‘கறுப்பர் கூட்டம்’ எனும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு காணொலி வெளியானது. இதனால் பல தரப்பிலிருந்தும் விமர்சனம் எழுந்தது. காணொலியைத் தடை செய்யக்கோரியும், வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ‘கறுப்பர் கூட்டம்’ சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் கந்த சஷ்டி குறித்து வீடியோவில் பேசி, அதனை வெளியிட்ட சுரேந்திரன் என்பவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் புதுச்சேரியில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சுரேந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி, பிறகு சிறையில் அடைத்தனர்.
பின்னர் தி.நகரில் உள்ள ‘கறுப்பர் கூட்டம்’ அலுவலகத்தை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். கந்த சஷ்டி குறித்த ‘கறுப்பர் கூட்டம்’ வெளியிட்ட வீடியோவையும் யூடியூபிலிருந்து சைபர் க்ரைம் போலீஸார் முடக்கினர்.
கந்த சஷ்டி காணொலியை முடக்கினாலும், தளம் முழுவதும் சர்ச்சைக்குரிய காணொலிகள் உள்ளதால் முற்றிலும் சேனலை முடக்க போலீஸார் முடிவெடுத்துள்ளனர். ‘கறுப்பர் கூட்டம்’ அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களை யூடியூப் நிர்வாகத்திற்கு அனுப்பி ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலை முற்றிலும் முடக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் சைபர் க்ரைம் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள ‘கறுப்பர் கூட்டம்’ சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடும் பணியிலும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.