படங்கள்: எஸ்.பாலச்சந்தர் 
தமிழகம்

ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்குத் தடை: வெறிச்சோடிய ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல்

எஸ்.முஹம்மது ராஃபி

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் ஆடி அமாவாசை தினமான இன்று (திங்கள்கிழமை) தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும். முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஐதீகத்தைப் பூர்த்தி செய்ய இந்துக்கள் தை, மாசி, ஆடி, மற்றும் மஹாளய அமாவாசைகளில் நீர் நிலைகளில் நிறைவேற்றுவார்கள்.

ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை அன்று ராமேசுவரத்தில் குவிவர்.

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இதனால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் ஆடி அமாவாசை அன்று வருடந்தோறும் நடத்தும் ராமர்,சீதை தீர்த்த வாரி நிகழ்ச்சியையும் ரத்து செய்தது.

மேலும் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்பதால் ஆடி அமாவாசை அன்று லட்சக் கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் ராமேசுவரம் திங்கட்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் இது போல ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி சேதுக்கரை கடற்கரை, தேவிப்பட்டிணம் நவபாசனம் கடற்கரை ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்யவும், புனித நீராடவும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

முன்னதாக ராமேசுவரத்தில் திங்கட்கிழமை அதிகாலை சென்னையை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ராமேசுவரத்தில் உள்ள புரோகிதர் ஒருவரின் வீட்டில் பூஜை செய்து பின்பு அக்னி தீர்த்த கடற்கரை அருகே கடலில் தர்ப்பணம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் இலட்சுமண தீர்த்தத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மூன்று அறைகள் எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT