சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கேன்டீனில் பொருட்கள் வாங்க நாள்ளிரவே இடம் பிடித்து ராணுவத்தினரின் குடும்பத்தார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் காத்திருந்தனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினரின் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு மாதந்தோறும் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள என்.சி.சி கேன்டீனில் சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது கரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கேன்டீனுக்குப் பொருட்கள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தாமதமாக சென்றால் பொருள்கள் கிடைக்காது என்பதால் இரண்டு தினங்களுக்கு முன்பே முன்னாள் ராணுவவீரர்கள் கேன்டியன் வாசலில் துணிப்பை மூலம் வரிசையில் இடம்பிடிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று பொருட்களை வாங்குவதற்காக நேற்று இரவே கேன்டீனின் முன்பாக முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர்.
காலையில் கேன்டீனை திறந்ததும் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.