காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை திருவிழாவையொட்டி நகரத்தில் உள்ள கோயில்களில் 19-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை அன்று பிரசித்தி பெற்ற கருட சேவை விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் மற்றும் காஞ்சிபுரம் கைத்தறி பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து புகைப்படக் கண்காட்சி ஒன்றை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த புகைப்பட கண்காட்சியில் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோயில்களில் 19-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்பட்டுவரும் அரியவகை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் இரு தினங்களில் மட்டும் சுமார் 1,500 பேர் பார்வையிட்டனர். அரிய படங்களை பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததாக பாராட்டியுள்ளனர். இந்த கண்காட்சியில் காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
முதியவர்கள் பலர், அவர்களின் இளமைக் கால நினைவுகளை இப்படங்கள் அசைபோட வைத்ததாக தெரிவித்தனர். ‘‘கண்காட்சியை பார்வையிட்ட பலர், இந்த புகைப்படக் கண்காட்சியை பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடைபெறும் மே 18-ம் தேதி வரை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மே 18-ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்படுகிறது.’’ என்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இந்த கண்காட்சி ஒவ்வொரு நாளும் காலை 9 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.