தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவில் நடைபெற்ற கரோனா பரிசோதனை சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் நகர்நல அலுவலர் அருண்குமார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

காய்கறி சந்தைகள் மூலம் அதிகமாகப் பரவும் கரோனா தொற்று: மக்கள் கவனமாக இருக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி சந்தைகள் மூலம் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சிறப்புப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெரு, உழவர் சந்தை, டாக் தொழிற்சாலை ஊழியர் குடியிருப்பு ஆகிய இடங்களில் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'தூத்துக்குடியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக ஏற்படும் பகுதியில் அனைவரும் பரிசோதனை செய்து கொள்வதற்காக 12 இடங்களில் பரிசோதனை மையம் அம்மைக்கப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனை மையங்கள் தினசரி காலை முதல் மாலை வரை செயல்படும். சளி தொந்தரவு, காய்ச்சல், லேசான அறிகுறி உள்ளவர்களும் இந்தப் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

தூத்துக்குடி உழவர் சந்தை பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் 150 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிள்ளது.

எனவே கடந்த 5 தினங்களாக அந்த சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தங்களை கரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் மக்கள் தங்களுக்கு ஏதாவது சிறிய அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையங்கள் மூலமாக பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக ஏற்கெனவே 800 படுக்கைகள் தயாராக உள்ளன. மேலும் கூடுதலாக 800 படுக்கை வசதிகள் செய்யப்படுகின்றன. கோவில்பட்டியில் கூடுதலாக 100 படுக்கை வசதிகளும், திருச்செந்தூரில் கூடுதலாக 150 படுக்கை வசதிகளும் செய்யப்படவுள்ளது.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1300 முதல் 1400 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு வாரத்திற்குள் தினமும் 2000 மாதிரிகள் பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி சந்தை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்றார் ஆட்சியர்.

SCROLL FOR NEXT