அரியலூர் அடுத்த வி.கைகாட்டியில் மின்சார சட்டத் திருத்தத்தைக் கண்டித்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினர்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை ஒடுக்கும் நிலையைக் கண்டித்தும், மின்சார திருத்தச் சட்டம் 2020 (வரைவு), விவசாயிகளின் பம்பு செட் மற்றும் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020-ஐக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்புவது எனக் கடந்த 17-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில், இன்று ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அரியலூர் அடுத்த வி.கைகாட்டியில் (தனியார் வணிக வளாகம்) நடைபெற்ற இந்தக் கையெழுத்து இயக்கத்துக்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலர் வாரணவாசி ராஜேந்திரன் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
மதிமுக மாவட்ட செயலாளர் கு.சின்னப்பா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் இளங்கீரன், மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன், அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்.செங்கமுத்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணியன், பெண்ணாறு மற்றும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெகநாதன், மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் செந்தில்குமார் உள்பட பலரும் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் இதற்கு ஆதரவாகக் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.