முழு ஊரடங்கில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கையொட்டி சென்னை அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் போலீஸார் மேற்கொண்ட வாகன தணிக்கையை நேற்று ஆய்வு செய்த பின்னர், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இந்தகண்காணிப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். 200 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. 144 தடை உத்தரவை மீறியதாக சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டம் கூடாதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். காசிமேடு உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிக்கிறோம். அத்தியாவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வர கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
காவல் துறையினர் கரோனா தொற்றுக்கு ஆளாவதை தடுக்க தொடர்ந்து வழிமுறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மேலும் முகக் கவசம், சானிடைசர், கபசுர குடிநீர் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரோனா தொற்று குறைந்த பின்னர், காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்படும். காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 5 ஆயிரம் போலீஸாருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ஆர்.சுதாகர், போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) எஸ்.லஷ்மி, திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜி.தர்மராஜன், போக்குவரத்து துணை ஆணையர் (கிழக்கு) எஸ்.ஆர்.செந்தில்குமார் உடனிருந்தனர்.