கரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி பல ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். இதுவரையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வரும் செய்தி, ஓட்டுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கால் சுமார் 4 மாதங்களாக போக்குவரத்து துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இதையே நம்பியுள்ள ஆட்டோ, கால்டாக்சி, லாரிகள் போன்ற பல்வேறு வகை வாகனங்களின் ஓட்டுநர்கள் போதிய வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும், போதிய சவாரி கிடைக்காததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், வாங்கிய வாகன கடனுக்கு மாதாந்திர தொகை கட்ட முடியாமலும் அவதிப்படுகிறார்கள்.
ஓட்டுநர்கள் தற்கொலை
இதுதொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் சுமார் 10 லட்சம் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.1,000 என அரசு அறிவித்தது. இவர்களுக்கும் முழுஅளவில் இந்த தொகை கிடைக்கவில்லை. அப்படியே இருந்தாலும், இந்த தொகை அன்றாட வாழ்க்கை நடத்த போதுமா?, மற்றொருபுறம் வாகன கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
வட்டி தள்ளுபடி கோரிக்கை
வாழ்க்கையின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். எனவே, அரசு, ஓட்டுநர்களை பாதுகாக்க மேலும் காலம் தாழ்த்தாமல், ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்துக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தற்கொலை செய்துள்ள ஒட்டுநர்களின் குடும்பத்தினருக்கு அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’’ என்றார்.
தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கவுதமன் கூறும்போது, ‘‘வாகன கடன் மீதான தவணை வட்டியை ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டும்’’என்றார்.
இதுதொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறும்போது, ‘‘அத்தியாவசிய உணவுபொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக பணிக்கு வரும் லாரி ஒட்டுநர்கள் பணியை முடித்துவிட்டு, வீடுகளுக்கு செல்லும் போது 15 நாட்கள் வரையில் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.
இதுதவிர, மற்ற லாரிகள், வாகனங்கள் முழு அளவில் ஓடாததால், வருமானம் இன்றி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு இதுவரையில் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது’’ என்றார்.