சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக சாத்தான்குளம் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஏ.சாம்சன்(22) என்பவர் வாட்ஸ் அப்பில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கும், மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சிவா என்பவருக்கும் இடையே கடந்த 15-ம் தேதி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவா உட்பட அவரது நண்பர்கள் 20 பேர் தனது வீட்டுக்கு வந்து தகராறு செய்து பொருட்களையும், 3 மோட்டார் சைக்கிள்கள், கார் ஆகியவற்றை சேதப்படுத்தியதாகவும், இதை கண்டித்த தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சாத்தான்குளம் போலீஸில் சாம்சன் புகார் அளித்தார்.
இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் விசாரணை நடத்தி சிவா உட்பட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்.