கரோனா ஊரடங்கால் பழநி அருகே ஆயக்குடி கொய்யா மார்க்கெட் மூடப் பட்டுள்ளது. இந்நிலையில், கொய்யாப் பழங்களை சமூக வலைதளம் மூலம் விற்று லாபம் ஈட்டி வருகிறார் பழநி இடும்பன் மலை அடிவாரத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி மகுடீஸ்வரன். அவர் கூறியதாவது: எம்.பி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். எனது தந்தைக்கு உதவும் வகையில் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கி உள்ளேன். கரோனா ஊரடங்கால் ஆயக்குடி கொய்யா மார்க்கெட் மூடப்பட்டதால் எங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை விற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் எனது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள் குறித்து பதிவிட்டேன். ஏராளமா னோர் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கொய்யா கிலோ ரூ.20-க்கு விற்கிறேன். நேரடி விற்பனையால் ஓரளவு லாபம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.