தமிழகம்

கோவையில் கோயில்கள் சேதம்: ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

கோவை உக்கடம் மாகாளியம்மன் கோயில், ரயில் நிலையம் விநாயகர் கோயில், நல்லாம்பாளையம் செல்வ விநாயகர் கோயில்களின் முன்பு டயர்களைக்கொளுத்தி, திரிசூலத்தை சேதப்படுத்தியது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து, போலீஸார் விசாரித்து வந்தனர்.

சிசிடிவி கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில், சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கஜேந்திரன்(48) என்பவர், இச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று கஜேந்திரனை கைது செய்த போலீஸார், எதற்காக கோயில் முன்பு தீ வைத்தார், உடந்தையாக இருந்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு: "கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவகையில், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி: கோவையில் பெரியார்சிலையை களங்கப்படுத்தியதும், மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதும் அதிர்ச்சியளிக்கிறது.

இதுபோன்று மக்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: கோயில்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோயில்களை சேதப்படுத்தியும், கடவுள்களை இழிவுபடுத்தியும் மத மோதல்களைத் தூண்டசதிகள் நடக்கின்றன. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, மத நல்லி ணக்கம் பாதுகாக்கப் பட வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கோவையில் 4 கோயில்கள் முன்பு டயர்களை எரித்து அராஜகத்தில் ஈடுபட்டவர்களின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

இந்தக் கயமைச் செயலில் ஈடுபட்ட வன்முறையாளர்களை தமிழக காவல்துறை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான செயல்கள் அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கத்தக்க இழி செயலாகும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: கோவையில் 4 கோயில்களின் வாசல்களில் டயர்களை எரித்து அராஜகத்தில் ஈடுபட்ட வர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.தமிழகத்தின் சமூக நல்லிணக்கம் நீடித்து நிலைக்கும் வகை யில் இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரித்து இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT