கும்பகோணத்தில் கரோனா தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் பேசுகிறார். 
தமிழகம்

கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் நாளை நடைபெறவிருந்த ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்குத் தடை; ஆட்சியர் தகவல்

வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் நாளை நடைபெறவிருந்த ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது.

கூட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்ஜய் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்த், கும்பகோணம் கோட்டாட்சியர் விஜயன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராமு, துணை இயக்குநர் ரவீந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர்நல அலுவலர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கும்பகோணத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைப் பற்றி பல்வேறு துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக கரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. குறிப்பாக, தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறி கொண்டு வந்தவர்களால்தான் நோய் தொற்று அதிகமாகி உள்ளது. இதனால் இதுவரை கும்பகோணத்தில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 259 பேரில் பெரும்பாலானோர் காய்கறி மார்க்கெட்டோடு தொடர்பு உள்ளவர்கள்.

இந்த நிலையில், கும்பகோணத்தில் 3 பேருக்கு மேல் நோய் தொற்று உள்ளவர்கள் வசிக்கும் 20 தெருக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை நோய் கட்டுப்பாடு உள்ள பகுதியாக கருதப்பட்டு அந்த பகுதி முழுவதும் நகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

மேலும், நோய் பரவாமல் இருக்க பரிசோதனைகள் முகாம் நடத்த உள்ளோம். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த ஆய்வுக்காக கும்பகோணம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனையில் நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு சிகிச்சைகள் தரப்படும்.

நோய் தொற்று உள்ளவர்களுக்காக கும்பகோணத்திலேயே மேலும் சில மையங்களை அமைக்க உள்ளோம். நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு கும்பகோணத்திலேயே சிகிச்சை அளிக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. ஒரு வேளை தஞ்சாவூர் மாட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறினால் அரசின் அனுமதியயை பெற்று முழு ஊரடங்கு மேற்கொள்ளப்படும்.

கும்பகோணத்தில் கூட்ட நெரிசலை குறைக்க காய்கறி விற்பதற்காக 6 இடங்களும், மீன் விற்பதற்காக இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு மட்டும்தான் வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும். இந்த விற்பனையை முறைப்படுத்த 8 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை (ஜூலை 20) ஆடி அமாவாசை ஆகும். இதற்காக பலர் வழக்கமான சடங்குகளை செய்ய கும்பகோணம் காவிரி ஆற்றுக்கு வருவார்கள். தற்போது கரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் அந்த நிகழ்ச்சி நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோயை கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் கண்காணிப்பு குழுவின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கும்பகோணம் வியாபாரிகள் மதியம் 4 மணிக்குப் பிறகு கடைகளை நடத்துவதில்லை என்று அவர்களாகவே முடிவுடுத்துள்ளார்கள். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

மாவட்டத்தில் போதுமான அளவு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. கரோனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல மட்டுமே 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT