மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக வரலாறு காணாத துன்பத்தையும், பொருளாதார பேரழிவையும் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் சமூக விரோதிகளின் சட்டவிரோத செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
கோவையில் பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் களங்கப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அதே பகுதியில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்கள் உணர்வுகளை புண்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வேண்டும்.
ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துகிற வகையில் 'கருப்பர் கூட்டம்' என்கிற அமைப்பு யூடியூப் மூலம் பதிவுகள் வெளியிட்டு மக்கள் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் நம்பிக்கைகளை புண்படுத்துவது, வெறுப்பை வளர்ப்பது, அவதூறுகளை பரப்புவது, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிற சமூக விரோதிகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறேன். எனவே, மக்கள் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்தகைய மக்கள் விரோத செயல்கள் தொடர்வதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.