தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
தமிழகத்தில் நேற்று (ஜூலை 18) வரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,403 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று (ஜூலை 19) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி வெளியீடு:
"இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதல்வர், இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48 ஆயிரம் கரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.