தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் தலைமை முயற்சிக்கிறது என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
1955-ல் காமராஜரால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை’க்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்த அறக்கட்டளைக்கு காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் மோதிலால் வோரா, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன், முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா ஆகிய 4 பேர் அறங்காவலர்களாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள இடத்தை காங்கிரஸ் தலைமை அபகரிக்க முயற்சிப்பதாக ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நேற்று பேசிய அவர் கூறியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்களை நியமிக்கதமிழக காங்கிரஸ் கமிட்டிக்கே அதிகாரம் என்றாலும், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி தன்னிச்சையாக அறங்காவலர்களை நியமித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக தேனாம்பேட்டையில் உள்ள ரூ.20 ஆயிரம் கோடி இடத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் இந்த அறக்கட்டளையின் சொத்துகளை கட்டுப்படுத்தி வருகிறார்.
இந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘நேஷனல் ஹெரால்டு’ மோசடியைவிட இது10 மடங்கு அதிகம். இது தொடர்பாக அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் ஜி.கே.வாசன் என்னை தொடர்பு கொண்டு, ‘காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அறக்கட்டளைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு நடப்பது எதுவும்எனக்குத் தெரியாது’ என தெரிவித் தார்.
இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி மறுப்பு
இந்த குற்றச்சாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ்’செய்தியாளரிடம் அவர் கூறும்போது, ‘‘எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் அறக்கட்டளை குறித்து குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த அறக்கட்டளையில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்க வேண்டுமானால்கூட 3 அறங்காவலர்கள் கையெழுத்திட வேண்டும். அறக்கட்டளையில் இருந்து கல்வி, மருத்துவ உதவியாக ஆண்டுக்கு ரூ. 2 கோடி வழங்கிவருகிறோம். நான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அறக்கட்டளை குறித்து ஒருமுறைகூட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கேட்டதில்லை. அதில் அவர்கள் ஒருபோதும் தலையிட்டதில்லை.
எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை
அறக்கட்டளைக்கு உறுப்பினர்களை சோனியா காந்தி தன்னிச்சையாக எப்போதும் நியமிக்கவில்லை. காங்கிரஸ் மாநில பொதுக்குழுவே அறங்காவலர்களை நியமித்து வருகிறது. தேனாம்பேட்டை இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கான எந்தவொரு நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
எங்கள் மீது வீண் பழி சுமத்தினால் குருமூர்த்தி பற்றியும், தமிழகபாஜக அலுவலகமான ‘கமலாலயம்’ எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்தும் நாங்கள் பேசவேண்டியிருக்கும்’’ என்றார்.