ஆடி மாதம் கிராமக் கோயில்களில் அதிக அளவில் கொடை விழாக்கள் நடக்கும் காலம். வில்லிசை, நையாண்டி, மகுட மேளம் என கிராமக் கோயில்களில் உற்சாகம் ஊற்றெடுக்கும். ஆனால், இது கரோனா காலம் என்பதால் கூட்டம் கூட்டமுடியாமல் பெயரளவில் கோயிலைத் திறந்து கொடை விழாக்களை மட்டும் நடத்துகின்றனர் பக்தர்கள்.
கரோனா பொதுமுடக்கத்தால் கொடை விழாவின் முக்கிய அம்சமான கலை நிகழ்ச்சிகளும் ரத்தாகியிருக்கின்றன. இதனால் கிராமியக் கலைஞர்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், தங்கள் கோயில் கொடை விழாவில் ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்களை அன்போடு அழைத்து, நிகழாண்டு நிகழ்ச்சியே நடத்தாதபோதும் கொடை விழாவின் நிறைவு நாளில் பணம் கொடுத்துக் கவுரவித்துள்ளனர் நாகர்கோவில்வாசிகள்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான செட்டிக்குளத்தில் உள்ளது சாந்தான் செட்டிவிளை பலவேஷக்கார சாமி கோயில். இந்தக் கோயிலின் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கி இன்று (சனிக்கிழமை) மதியத்துடன் நிறைவடைந்தது. விழாவில் நிகழ்ச்சிகளை நடத்தாவிட்டாலும் கிராமியக் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதுகுறித்து பலவேஷக்காரசாமி கோயில் விழாக் குழுவைச் சேர்ந்த எஸ்.ஏ.விக்கிரமன் நம்மிடம் பேசுகையில், “இது நூற்றாண்டு கடந்த மிகப் பழமையான கோயில். ஒவ்வொரு வருஷமும் ஆடி முதல் வெள்ளியைக் கணக்கில் கொண்டு இந்தக் கோயிலில் மூன்று நாட்கள் கொடை விழா நடக்கும். இந்த ஆண்டு அரசு விதிகளுக்கு உட்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தன.
கடந்த ஆண்டு சுபராகம் தங்கமணியின் வில்லிசை நிகழ்ச்சி இருந்தது. இதேபோல் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூரைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகுட வாசிப்பும் இருந்தது. மேளத்துக்கு ஈசாந்திமங்கலம் கோபாலகிருஷ்ணன் ஒவ்வொரு வருடமும் வருவார். இந்த முறை இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கரோனாவால் நடத்தமுடியவில்லை. அதேநேரம் இந்தக் கலைஞர்களின் டைரிக் குறிப்பில் இந்தக் கோயில் கொடையில் தங்களுக்கும் ஒரு நிகழ்ச்சி இருக்கும் என எழுதி வைத்திருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி நிகழ்ச்சி வழங்கமுடியாத படிக்கு கரோனா தடுத்துவிட்டது.
இருந்தாலும் அந்தக் கலைஞர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை நேரடியாக அழைத்து மூன்று நாள்கள் கோயில் பக்கத்தில் தங்கியிருந்து நிகழ்ச்சி நடத்தினால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளமாக கொடுப்போமோ அதில் 25 சதவீதத் தொகையை நிகழ்ச்சி நடத்தாமலே கொடுத்தோம். இதை அவர்களிடம் சொன்னதும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் நேரடியாகக் கோயிலுக்கே வந்துவிட்டார்கள். மகுடக்காரர் தூத்துக்குடி மாவட்டம் என்பதால் அவரால் வரமுடியவில்லை. அதனால் அவரது வங்கிக்கணக்கில் அவருக்கான தொகையைச் செலுத்தியிருக்கிறோம்.
பெரும் பொருட்செலவு செய்து கொடை விழா நடத்துகிறோம். அதற்கு முன்னால் இது பெரிய தொகை இல்லை. எங்களைப் போல அனைத்துக் கோயில் நிர்வாகிகளும் முடிவெடுத்தால் இந்தக் கரோனா காலத்தில் கஷ்டத்தில் இருக்கும் கிராமியக் கலைஞர்களுக்கு ஏதோ நம்மால் ஆன உதவியைச் செய்த திருப்தி இருக்கும்” என்றார்.