தமிழகம்

மதுரையில் கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்தது: ஒரே நாளில் 9 பேர் பலி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்தது. இன்று ஒரே நாளில் 185 பேருக்கு ‘கரோனா’ தொற்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் ‘கரோனா’ பரவல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக மதுரையில் அதிகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் ‘கரோனா’ பரவியபோது மதுரை மாவட்டத்தில் பரிசோதனை செய்தவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இந்தத் தொற்று பரவியதால் மதுரையிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது.

அதனால், பரிசோதனை செய்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு ‘கரோனா’ கண்டறியப்பட்டது. தற்போது ஒரளவுக்கு பரவல் கட்டப்படுத்தப்பட்டு சராசரியாக 7 சதவீதமாக குறைந்துள்ளது.

தற்போது 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை சென்னைக்கு அடுத்த அதிகமாக பரிசோதனைகள் மதுரையில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று புதிதாக 185 பேருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. இவ்ரகளுடன் சேர்த்து மதுரை மாவட்டத்தில் 8044 பேர் ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று கரோனா சிகிச்சைப்பலனளிக்காமல் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 147 பேர் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இந்த நோயிலிருந்து குணமடைந்து வீட்டிற்குச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று வரை 4,758 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 81 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT