பண மதிப்பிழப்பு குறித்து அறியாமல் பழைய ரூபாய் நோட்டுகளைப் புதைத்து, சேமித்து வைத்திருந்த மாற்றுத்திறனாளிப் பெண்மணி குறித்த விவரம் தெரிந்து பலரும் மனிதாபிமானத்துடன் அவருக்கு உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜதுரை (58). இவர் தனது கூரை வீட்டை இடித்துவிட்டுத் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் பணியைக் கடந்த வாரம் தொடங்கினார். வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டியபோது அங்கு பாதுகாப்பாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நெகிழிப் பையை வெளியே எடுத்துப் பார்த்திருக்கிறார். அதற்குள்ளே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் ரூ.35,500 மதிப்பில் இருந்தன.
அந்தப் பணம் எப்படி அங்கே வந்தது என்று கேட்டபோதுதான் அதிர்ச்சியும் சோகமான அந்த உண்மை தெரியவந்தது. குடிப்பழக்கம் உள்ள ராஜதுரை, தான் சம்பாதிக்கும் பணத்தைக் குடித்து அழித்து வந்திருக்கிறார். அவரது மனைவி உஷா (52), வாய் பேச முடியாத மற்றும் காதுகேட்காத மாற்றுத்திறனாளி. அவரது மகள் விமலாவும் (17) அவரைப் போலவே வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காதவர். கணவர் இப்படி இருக்க, மாற்றுத் திறனாளியான மகளை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று நினைத்த உஷா, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
அதில் கிடைத்த கூலியைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகள் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருக்கிறார். அத்துடன் மகளுக்குத் தேவையான அரை பவுன் தங்கம், தோடு ஆகியவற்றையும் வைத்துத் தனது கணவருக்குத் தெரியாமல் தனது வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டிப் புதைத்து வைத்துள்ளார் உஷா. இதைக் கொண்டு எப்படியும் மகளை நல்லபடியாகத் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று நம்பிக்கை அந்தத் தாய்க்கு.
இதற்கிடையே, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தது மாற்றுத்திறனாளிகளான உஷாவுக்கும், விமலாவுக்கும் தெரியவில்லை. இந்நிலையில்தான் வீடு கட்டப் பள்ளம் தோண்டியதில் அந்தப் பணம் கிடைத்திருக்கிறது. அந்தப் பணம் செல்லாது என்று கட்டிடத் தொழிலாளர்கள் உஷாவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தான் சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் செல்லாது என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த உஷா, மிகுந்த மன வேதனைக்கு உள்ளானார். என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்தில் இருந்த நிலையில், இதுகுறித்து ஊடகங்களில் தகவல் வெளிவர உஷா மீது பலருக்கும் பரிதாபம் ஏற்பட்டுத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
விமலாவுக்கு எப்போது திருமணம் நிச்சயமானாலும் தாங்கள் தாலி எடுத்துத் தருவதாகச் சிலர் உறுதி அளித்துள்ளனர். தன்னைப் பற்றி வெளியே தெரிய வேண்டாம் என்று கருதிய ஒருவர் 5 லட்ச ரூபாயை அவர்கள் குடும்பத்தின் பெயரில் வைப்புத் தொகையாக அளித்திருக்கிறார். அந்தக் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் சிலர் கொண்டு வந்து கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் சீர்காழி ரோட்டரி சங்கத்தினர், ராஜதுரை, உஷா, மகள் விமலா ஆகியோரை இன்று சீர்காழி ரோட்டரி சங்கக் கட்டிடத்திற்கு அழைத்து வந்து, அவர்கள் சேமித்து வைத்திருந்த தொகையான ரூ.37 ஆயிரத்துக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகளை அவர்களுக்கு வழங்கினர்.
இப்படி நல்ல உள்ளம் கொண்டோரின் நல்லாசிகளுடன் விமலாவின் திருமணம் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புவோம்.