பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ‘கரோனில்’ என்ற மருந்தின் வணிகப்பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே இது கரோனா சிகிச்சைக்கான மருந்து என்று இது விளம்பரப்படுத்தப்படுவது சர்ச்சைக்குள்ளாகி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியரிங் தனியார் நிறுவனம் கரோனில் என்ற வணிகப் பெயருக்கு 1993ம் ஆண்டு முதல் தாங்கள் உரிமை வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஜூலை 30ம் தேதிவரை பதஞ்சலி நிறுவனம் கரோனில் என்ற பெயரைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
ஆருத்ரா இன் ஜினியரிங் நிறுவனம் கரோனில்-213 எஸ்பிஎல், கரோனில்-92பி, என்று 1993-லேயே பெயர்களை சட்ட ரீதியாகப் பதிவு செய்ததாகக் கோரியது. மேலும் இந்த வணிகப்பெயர்களை தொடர்ந்து முறையாகப் புதுப்பித்தும் வந்திருக்கிறது. இந்த நிறுவனம் கெமிக்கல்ஸ் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.
“இந்த கரோனில் என்ற பெயருக்கான உரிமை எங்களிடம் 2027-ம் ஆண்டு வரை உள்ளது” என்று அந்த நிறுவனம் தன் மனுவில் தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் வாடிக்கையாளர்களில் பி.எச்.இ.எல் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களும் உள்ளதால் தங்களின் இந்த தயாரிப்புக்கு ஒரு உலக அளவிலான இருப்பு உள்ளது என்று கோருகிறது அந்த நிறுவனம்.
தங்களது உரிமை கோரலுக்கான ஆதாரங்களாக தங்களின் 5 ஆணடுகால விற்பனை ரசீதுகளை சமர்ப்பித்தது.
இதனையடுத்து கரோனில் என்ற பெயரைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.